அதிரடியாக !! கடலூர் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்


இட ஒதுக்கீடு குறித்து நீதித்துறையை அவமரியாதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நேற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் அதிரடியாக நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் பல யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்தார். அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். சில விவகாரங்கள் உயர் மட்ட அளவில் சர்ச்சையை எழுப்பியது. 

இந்தநிலையில், இரண்டு நாட்கள் முன்பு பிரபல யூடியூப் சேனலில் பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. தீர்ப்புக்குப் பின், மதுரை சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சவுக்கு சங்கர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

நிர்வாக காரணங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Next Post Previous Post